விருதோடை மு.ம.வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன், வியாழன் ஆகிய தினங்களில் போட்டிகள் இடம்பெற்று வெள்ளிக்கிழமை வித்தியாலய அதிபர் எம். எச். எம். அமீர் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக வர்த்தக, கைத்தொழில், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டார்.

வித்தியாலய மாணவர்கள் அல் ஹம்ரா, அல் – அஸ்ஹர், அல் – அலிகார் என்று மூன்று இல்லங்களாப் பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். கரப்பந்தாட்டம், கிரிக்கெட், எல்லே, மரதன், கரம் உள்ளிட்ட போட்டிகளுடன் ஏராளமான மைதானப் போட்டிகளிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிகளில் அல் – ஹம்ரா இல்லம் 549.5 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இதற்கான வெற்றிக் கிண்ணத்தை அமைச்சர் ரிசாத் பதியுத்தீனிடமிருந்து அவ்வில்லத்தின் தலைவர் பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் இடத்தை 499 புள்ளிகளைப் பெற்று அல் – அலிகார் இல்லம் பெற்றுக் கொண்டதோடு மூன்றாம் இடத்தை 429.5 புள்ளிகளைப் பெற்று அல் அஸ்ஹர் இல்லம் பெற்றுக் கொண்டது. ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பரிசில்களும் வழங்கப்பட்டதோடு இறுதி நிகழ்ச்சியாக பாடசாலை மாணவிகளின் கண்கவர் உடற்பயிற்சியுடன் இடம்பெற்ற அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எச். எம். நியாஸ், என்.டி.எம். தாஹிர், சட்டத்தரணி ஏ. எம். கமறுதீன், கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம். இன்பாஸ், பிரதேச சபை உறுப்பினர்களான எம். ஐ. எம். ஆசிக், பைசர்கான் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அனுசரணையாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(புத்தளம் விஷேட நிருபர்)

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை