கட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தரப்பினரினதும் குடும்பத்தை மையாகக் கொண்ட கட்சியல்ல. எனவே ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டே வேட்பாளர் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.தேயிலைச் சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

பொதுஜன பெரமுனையில் மஹிந்த ராஜபக்ஷ யாரைத் தெரிவுசெய்கிறாரோ அந்த நபரே ஜனாதிபதி வேட்பாளராவார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தனிநபரினாலும் கட்டுப்படுத்தப்படும் கட்சியல்ல. ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் செயற்படும் கட்சியாகும்.

கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் தலைமைத்துவம் வரையில் உள்ள சகலரின் கருத்துக்களையும் அறிந்துகொண்டே தீர்மானங்களை எடுப்போம் என்றார். அமெரிக்காவைப் போன்ற அரசியல் கலாசாரம் இலங்கையில் இல்லை. அமெரிக்காவில் பில் கிளின்டன்,டொனால்ட் ட்ரம் போன்ற எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நபர்கள் தமது கட்சிகளுக்குள் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படலாம். எனினும், இலங்கையில் அவ்வாறான அரசியல் கலாசாரம் இல்லை. மாறாக கட்சிகளுக்குள் வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வேட்பாளர் யார்? என்பது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடி தீர்மானிப்போம். நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய ஒருவரே, கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை