சட்டத்திற்கு முரணாக சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது

பாராளுமன்ற சிறப்புரிமையானது நாட்டின் பொதுவான சட்டத்திற்கு உட்பட்டதாகும்.எம்.பிகள் என்பதற்காக அவர்களுக்குத் தனியான சட்டம் கிடையாது என சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.நாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது எனவும் அவர் கூறினார்.

ஹொரவப்பொத்தானை தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அவர், எம்.பிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. எம்.பிகள் மீது குற்றச்சாட்டு எழுமானால் அவற்றில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது சபை முதல்வரின் பொறுப்பாகும். சில எம்.பிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சி.ஐ.டிக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.டி விசாரணையூடாக என்னென்ன அம்பலமாகிறது என எதிர்பார்த்திருக்கிறோம். பாராளுமன்றத்திற்குள் வைத்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். சிறப்புரிமை பற்றி சிலர் பேசினாலும் நாட்டின் சட்டத்திற்கு சிறப்புரிமை உட்பட்டதாகும். எம்.பிகளுக்கெனத் தனியான சட்டம் கிடையாது. அனைவருக்கும் ஒரே சட்டமே அமுலில் இருக்கிறது.

தமது கடமைகளை முறையாக செயற்படுத்துவதற்காகத் தான் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.மக்களுக்காக அவர்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தருகையிலும் பாராளுமன்றம் நிறைவடைந்து வீடு செல்கையிலும் எம்.பிக்களைக் கைது செய்ய முடியாது என சிறப்புரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது.மக்களின் சொத்துக்களை சேதமாக்கியதோடு சபாநாயகரின் ஒலிவாங்கியையும் உடைத்தார்கள்.யாரும் இதனைத் தடுக்க முயலவில்லை.

இன்னும் நாசகார வேலைகள் செய்யுமாறு தலைவர்கள் சமிக்ஞை கொடுத்தார்கள்.அன்று பாராளுமன்றத்திற்குள் யாராவது கொலையானால் சிறப்புரிமை என்று கூறி அதனை மூடிமறைக்க முடியுமா? சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க ​வேண்டும். பாராளுமன்றம் தெரிவாகும் எம்.பிகள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியில் ஐ.தே.க இருந்தபோது இவ்வாறு அநியாயங்கள் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வரும் பேராசையில் இவ்வாறு பொறுமையின்றி செயற்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை