சிரியாவில் பிடிபட்டுள்ள ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்து ஐரோப்பா அச்சம்: அவசரக் கூட்டம்

அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயக்கம்

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு கிராமம் ஒன்றின் சிறு துண்டு பகுதியில் சிக்கியுள்ள நிலையில் தனது கட்டுப்பாட்டு பகுதியை பாதுகாப்பதற்கு தொடர்ந்து போராடி வருகிறது. பிடிப்பட்ட ஐ.எஸ்ஸின் வெளிநாட்டு போராளிகளை ஐரோப்பா பொறுப்பேற்கும்படி டிரம்ப் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.  

ஈராக் எல்லைக்கு அருகில் கிழக்கு சிரியாவின் அரைக் கிலோமீற்றருக்கும் குறைவான துண்டு நிலப்பகுதியில் உறுதி கொண்ட ஐ.எஸ் ஜிஹாதிக்கள் சிக்கியுள்ளனர்.  

அவர்கள் பங்குஸ் என்ற அந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் வீதிகளை முடக்கியுள்ளதாக அவர்களுடன் போராடி வரும் அமெரிக்க ஆதரவு ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது.  

தற்போது ஜிஹாதிக்களின் வோக்கி டோக்கி குரல்களும் கேட்பதில்லை என்று அந்த கிராமத்தின் விளிம்புகளில் கூரைகளுக்கு மேல் நின்று கொண்டிருக்கும் சிரிய ஜனநாயகப் படை போராளிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

“தற்போது அவர்கள் கட்டுப்பாட்டு பகுதி நசுங்குண்டு உள்ளது. அவர்களிடம் அதிக வோக்கி டோக்கிகள் கூட இல்லை. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை” என்று குர்திஷ் தலைமையிலான ஜனநாயக படை வீரர் ஒருவர் குறிப்பிட்டார்.  

தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளிப்பிரதேசங்களை முடக்கி இருக்கும் ஐ.எஸ் சுமார் 2,000 சிவிலியன்கள் வெளியேறுவதை தடுத்து வருவதாக சிரிய ஜனநாயகப் படை பேச்சாளர் முஸ்தபா பாலி குறிப்பிட்டார். “ஐ.எஸ் அனைத்து வீதிகளையும் மூடியுள்ளது” என்று அவர் விபரித்தார்.  

ஐ.எஸ் குழுவிடம் இருந்து தப்பி வர முயற்சிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களை மனிதக் கேடயமாக அவர்கள் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் பேச்சாளர் சீன் ரியான் குறிப்பிட்டுள்ளார்.  

ஐ.எஸ் கட்டுப்பாட்டு பங்குஸ் கிராமத்தில் இருந்து அண்மைய வாரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி வந்தனர். எனினும் இவ்வாறு வருகை தருபவர்களை ஏற்கும் முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும்போது காலியாக இருந்தது. 

இங்கு எவரும் வாராமல் இரண்டு நாட்களாகின்றன என்று அமெரிக்க ஆதரவுப் படையினர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டனர்.  

இந்நிலையில் ஐரோப்பாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்காக ஐ.எஸ் உறுப்பினர்கள் சிரிய ஜனநாயக் படையிடம் பிடிபட்டிருக்கும் நிலையில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பிரசல்ஸ் நகரில் கூடினர். பிடிபட்டிருக்கும் வெளிநாட்டினர்களில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா மற்றும் இத்தாலி நாட்டவர்களும் உள்ளனர்.  

ஐரோப்பிய அரசுகள் இவ்வாறு பிடிபட்டவர்களில் இருக்கும் தமது பிரஜைகளை பொறுப்பேற்க வேண்டும் என்று சிரிய ஜனநாயகப் படை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இவர்களை ஏற்பதற்கு அந்த நாடுகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன.  

90 சிறுவர்கள் உட்பட 150 பிரான்ஸ் நாட்டவர்களை அந்த நாடு திரும்ப அழைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானபோது பிரான்ஸ் அரசு அதனை உறுதி செய்யவில்லை.  

இந்த பிரச்சினைக்கு கூட்டான ஐரோப்பிய தீர்வு ஒன்று தேவை என்று பெல்ஜியம் நீதி அமைச்சர் கொவேன் கீன் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.எஸ் சகாப்தம் சரிவதற்கு தயாராக உள்ளதாக டிரம்ப் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். 

“ஐ.எஸ் போராளிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை பார்த்துக் கொண்டிருக்க அமெரிக்கா விரும்பவில்லை. அங்கு ஊடுருவ வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். நாங்கள் நிறைய செய்கிறோம். அதிகமாக செலவு செய்கிறோம். இப்போது அடுத்தவர்களும் செய்வதற்கான காலம் வந்துவிட்டது. அவர்களிடம் அதற்கான திறனும் உள்ளது” என்று அவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 

“இல்லையென்றால் அவர்களை விடுவிக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும்” என்றும் டிரம்ப் எச்சரித்தார். 

கைது செய்யப்பட்ட சிப்பாய்கள் ஐரோப்பிய நாடுகளை ஆபத்துக்கு அழைத்து செல்வார்கள் என்று அஞ்சுவதாக டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் டெலிகிராஃப் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளனர். 

டிரம்ப்பின் இந்த கருத்தை தான் வெள்ளியன்று, பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை தலைவரும் தெரிவித்திருந்தார். சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு ஒடுக்கப்பட்டப்பின்னும். அந்த அமைப்பு மீண்டும் தன்னை புதுபித்துக் கொண்டே இருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார். 

ஜிஹாதி குழுக்கள் ஆபத்தான திறமைகள் மற்றும் தொடர்புகளுடன் ஐரோப்பாவுக்குள் நுழைவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பாடசாலை மாணவிகளில் ஒருவர், அந்த அமைப்பில் சேர்ந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதேவேளையில் மீண்டும் தான் பிரிட்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் டிரம்பின் இந்த டிவீட் வெளியாகியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று, “ஐஎஸ் அமைப்பு அடுத்த 24 மணிநேரத்தில் தோற்கடிப்பட்டது என்று அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். 

ஆனால் 24 மணி நேரங்களை கடந்த பின்னும் வெள்ளை மாளிகையிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. 

ஆனால் இதுகுறித்து அறிவிப்பு வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குர்திஷ் போராளிகள் தெரிவிக்கின்றனர். 

ஐ.எஸ் தரப்பில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டாலும், ஈராக் மற்றும் சிரியாவில் 14,000 முதல் 18,000 தீவிரவாதிகளை அந்த அமைப்பு கொண்டுள்ளதாக ஐ.நா தெரிவிக்கிறது.  

Tue, 02/19/2019 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை