ஜம்மு - காஷ்மீர் பகுதியில் மீண்டும் உக்கிர மோதல்

இந்திய தூதுவரை திருப்பி அழைத்தது பாகிஸ்தான்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றையதினமும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கொமாண்டர் உட்பட நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  

புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் தீவிரவாதி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இந்தியப் பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவுக்கான தமது உயர்ஸ்தானிகரை நேற்று மீள அழைத்துள்ளது. நேற்றையதினம் அவர் நாட்டுக்கு அழைக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணி மீது நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்41 பாதுகாப்புப் படையினர் உடல் சிதறிப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட விடயத்தால் விசனமடைந்திருக்கும் இந்திய அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதுவரை அழைத்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தான் தனது இந்தியத் தூதுவரை மீள அழைத்துள்ளது. கலந்துரையாடல் நடத்துவதற்கு தூதுவரை மீள அழைத்தாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதேநேரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை நேற்று அதிகாலை ஆரம்பித்துள்ளது. சுமார் 12 மணி நேரம் இந்த நடவடிக்கை தொடர்ந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதுடன், தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். ஐந்து தீவிரவாதிகள் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டதாக இந்தியத் தகவல்கள் கூறுகின்றன. இந்த மோதல்களில் 4 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க பயங்கரவாதி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இது இவ்விதமிருக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு இந்திய சினிமா பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது. அவர்கள் இந்தியப் படங்களில் நடிக்கக் கூடாது என்றும், அவ்வாறானவர்களுடன் பணியாற்றுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.   

Tue, 02/19/2019 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை