புதிய நோக்கு, புதிய பலத்துடன் உழைக்க ஒன்றுபடுவது அவசியம்

ஜனாதிபதி தேசிய தின வாழ்த்து  

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் உயரிய அர்த்தத்தினை அடைவதற்கான புதிய நோக்குடனும் புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இத்தருணத்தில் எம் அனைவரினதும் குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேசிய தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  

அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,..  

ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சுதந்திரம் அடைந்த ஒரு நாடு என்ற வகையில் நாம் எதிர்பார்ப்பது அவர்களுடனான சகலவித பிணைப்புக்களிலிருந்தும் விடுபட்ட சுய அடையாளங்களைக் கொண்ட அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான முன்னோக்கிய பயணமே ஆகும்.  

நூற்றாண்டுக்கும் மேலான காலமாக தோல்வி மனப்பான்மையுடன் கூடிய அடிமைத்தனத்திற்கு பழக்கப்பட்ட மனங்களுக்கு ஒரு நாட்டின் எதிர்காலம் பொறுப்பளிக்கப்படுகின்றது என்பது ஏகாதிபத்தியத்தை விட மோசமான விளைவுகளைப் பெற்றுக்கொடுக்க ஏதுவாக அமையும்.  

ஆகையால் எதிர்கால சுபீட்சம் நிமித்தம் தேசியத்துவத்தால் உயிரூட்டப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களே எமது எதிர்கால அபிவிருத்திக்கான தேவையாக அமைகின்றது.  

பண்டைய மன்னர் காலத்தில் உலகில் ஏனைய மாபெரும் நாகரிகங்களினால் நிறைவேற்றப்பட்ட பணிகளை அவற்றுக்கு ஒப்பான வகையில் செவ்வனே எம்மாலும் நிறைவேற்ற முடிந்தமைக்கு, நாம் ஒருபோதும் அந்நியர் மீது தங்கியிராது சுயாதீனமாக செயற்பட்டமையே காரணமாகும்.

நாம் நமக்குரிய தேசிய தனித்துவத்தை ஆரம்பம் முதலே கட்டியெழுப்பிய ஒரு மனித சமூகமானோம்.

ஆகையால் நமது நாட்டின் பொருளாதாரத்தின் அத்திவாரமாக கமத்தொழிலை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய காலமே மலர்ந்திருக்கின்றது என்பதை இந்த ஞாபகார்த்த தினத்தில் நான் உங்கள் அனைவருக்கும் வலியுறுத்த விரும்புகின்றேன்.  

அத்தோடு தேசிய புத்தெழுச்சியை ஏற்படுத்துவதில் கட்டாயத் தேவையான முன்னேற்றத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் பொது எதிரியாகிய வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கின்றது.  

காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த, உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களையும் இத்தருணத்தில் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூரும் அதேவேளை, தற்கால தேசத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்பு செய்துவரும் அனைத்து போர் வீரர்களையும் நன்றி உணர்வுடன் வாழ்த்துகின்றேன்.

Mon, 02/04/2019 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை