எந்த முறையிலாவது மாகாண சபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்

எந்த தேர்தல் முறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துமாறு லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை கோரியுள்ளது. தவறினால் தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார். மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்காக சகல விதமான அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு வழங்க இருப்பதாக குறிப்பிட்ட அவர், மே 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல மாகாண சபைகளினதும் தேர்தல்களை நடத்துவதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை ஜனாதிபதி சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்:

பழைய விகிதாசார முறையில் தேர்தல் நடத்துவதற்கான புதிய சட்ட மூலத்தை அரசாங்கம் சமர்ப்பித்தால் சகல எம்.பிக்களும் அதற்கு ஆதவு வழங்க தயாராக உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் தேர்தலை நடத்த வேண்டும்.

இது தொடர்பான யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சரான ஜனாதிபதி போதைப் பொருள் ஒழிப்பிற்காக மேற் கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள் ளன. சட்டவிரோத குழுக்கள் பலவற்றை கைது செய்ய முடிந்துள்ளது. சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே சட்டம் முறையாக நிறைவேற்றப்படுவதை எதிர்க்கின்றனர் என்றும் கூறினார்.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அரச வருமானத்தில் 35 வீதத்தை ஈட்டித் தரும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுகின்றன. அவர் வரிகளை முறையாக அறவிட நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வாகனங்கள் அடங்கலான பல பொருட்களுக்கான தீர்வை குறைக்கப்பட்டு ள்ளதால் வரி வருமானம் குறைந்துள்ளது.

சுங்கப்பணிப்பாளர் பதவிக்கு இதுவரை பொதுநிர்வாகம் அல்லது சுங்க திணைக்களத்தில் பணியாற்றிய ஒருவரே நியமிக்கப்பட்டார். அதற்கு மாற்றமாக இம்முறை நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.(பா)

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை