ஐ.எஸ் குழுவினர் சரணடையும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு நிலப்பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை ஏற்றிய 10 டிரக் வண்டிகள் நேற்று வெளியேறியுள்ளன.

ஈராக் எல்லையை ஒட்டி இருக்கும் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பாகூஸ் கிராமத்தில் இருந்து வெளியேறிய இந்த வாகனத் தொடரணிகள் அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையின் நிலையை வந்தடைந்துள்ளது.

பாகூஸ் கிராமத்திற்கு வெளியில் அமெரிக்க ஆதரவு படையின் முகாமுக்கு முகத்தை மறைத்த இளம் பெண்கள் உட்பட சிறுவர்கள் மற்றும் ஆண்களும் வந்தடைந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“பொதுமக்களை வெளியேற்றும் சிறப்புப் படை ஒன்றை நாம் செயற்படுத்தி இருக்கிறோம். பல தினங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பின்னர் முதல் கட்ட குழுவை எம்மால் வெளியேற்றி அழைத்து வர முடிந்தது” என்று சிரிய ஜனநாயக படையின் பேச்சாளர குறிப்பிட்டார்.

எனினும் இவ்வாறு வெளியேறியவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். எனினும் பாகூஸ் நகரில் தொடர்ந்தும் பொதுமக்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த ஜிஹாதிக்களின் மனைவி, குழந்தைகளான பெரும்பாலானவர்கள் அண்மைய வாரங்களில் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். எனினும் இந்த வருகை கடந்த ஒருசில தினங்களில் நின்றுவிட்டது.

இந்நிலையில் எஞ்சியிருக்கும் ஐ.எஸ் போராளிகள் சரணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சிரிய கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து 200 சிவிலியன்கள் வரை சிக்கி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டிருந்தது.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை