தேசிய அரசாங்கம் உருவாவதை தவறெனக் கூற முடியாது

அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உண்டு 

எம்.ஏ. எம். நிலாம் 

தேசிய அரசாங்கம் உருவாவது சுதந்திரக் கட்சிக்கோ வேறு எந்தக்கட்சிகளுக்கோ பிரச்சினையில்லை என்றும் ஆட்சியை ஒழுங்காகக் முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பிரிதொரு கட்சியின் ஒத்துழைப்பைப் பெறுவதில் தப்பேதும் கிடையாதென்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  

ஆளும்கட்சி பாராளுமன்றில் பெருமபான்மையைக் காட்டி தேசிய அரசாங்கத்தை அமைக்க முன்வந்தால் அதனை அங்கீகரிக்க வேண்டிய கடப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறான போதிலும் இன்னும் 18மாதங்கள் மாத்திரமே இந்த அரசு பதவியில் இருக்கப் போகின்றது. இந்நிலையில் சுதந்திரக்கட்சி எதற்காக தடுமாற வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.  

அரசாங்கத்தின் குறைகளைத் தேடுவதை விடுத்து சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதில் நாம் அக்கறை காட்ட வேண்டும். எமக்கிடையே காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாகாது என்று ஜனாதிபதி கூறியமை, தவறென்றே நான் நினைக்கின்றேன்.இவ்வாறு ஜனாதிபதியால் கூற முடியாது. அவரது கருத்தை நான்வேறு விதமாகவே பார்க்கிறேன். இன்னும் ஒரு வருட காலத்துக்கே பதவியிலிருக்கப் போகும் நிலையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர இயலாது என்பதாகவே அது இருக்க முடியும்.  

புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென 2015ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் மறந்துவிட முடியாது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நாட்டை பின்னடைவுக்குள் தள்ளியதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.  

அதிகாரத்திலிருக்கும் கட்சி நாட்டைக் கொண்டு செல்வதற்கென தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தவறானதாகக் கொள்ள முடியாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். அரசியலமைப்பில் இதற்கு ஏற்பாடுகள் உள்ளன. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது விருப்புக்கமைய நிலைப்பாடுகளை எடுக்க முடியும்.  

மற்றொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றுள்ளதும் தேசிய அரசாங்கமே. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். அவர் இன்றைய அரசாங்கத்தின் இரண்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றார். பாதுகாப்பு, சுற்றாடல்துறை ஆகிய இரண்டு அமைச்சக்களும் அவர் வசமே உள்ளன.

இப்படிப் பார்க்கின்றபோது இப்போது இருப்பது கூட தேசிய அரசாங்கமென்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

Wed, 02/06/2019 - 10:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை