படையினருக்கும் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் கோரிக்கை

அமைச்சர் சம்பிக்கவின் யோசனை தொடர்பில் ஆராய்வு

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக்கு சமர்பித்த படைத்தரப்பு, விடுதலைப் புலிகளுக்கான பொது மன்னிப்புக் கோரிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளதால் அமைச்சரவை இக்கோரிக்கையை இடைநிறுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் இதில் சில சட்டச் சிக்கல் காணப்படுவதால் அதனை ஆராயாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்று கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்பித்திருந்தார்.

படையினர் மட்டும்தான் போர்க் குற்றங்களைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த அமைச்சர் இக்குற்றத்தை இருதரப்பினருமே செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமானால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12,000 முன்னாள் புலிப் போராளிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

போர்ச்சூழலில் காணாமல் போனோர் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு காணாமல் போன சான்றிதழைப் பெற்றுக் கொடுப்பதோடு அக்குடும்பங்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

போரின் போது சேதமடைந்த வீடுகளுக்கும் கொல்லப்படாத போராளிகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் இராணுவத் தேவைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வடபுலத்து காணிகள் தொடர்பில் ஆராயந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

எம்.ஏ.எம்.நிலாம்

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை