கியூபாவிலுள்ள கனடா தூதரக பணியாளர்களுக்கு மர்ம நோய்

கியூபாவுக்கான கனடா தூதரக பணியாளர்களுக்கு மர்மமான சுகவீனம் ஒன்று ஏற்பட்டதை அடுத்து தூதரக பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படவுள்ளதாக கனடா அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அசாதாரணமான நோய் அறிகுறிகள் 14 கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் தொற்றி இருப்பது மருத்துவ சோதனை மூலம் உறுதியாகியுள்ளது.

இதனால் தூதரக பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும் என்று கனடா வெளிநாட்டு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு சுகவீனத்திற்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தலைவலி, குமட்டல் மற்றும் ஒன்றில் அவதானம் செலுத்துவதில் சிரமம் போன்ற பாதிப்புகளுக்கு அவர்கள் முகம்கொடுத்தனர்.

ஒலி ஊடான தாக்குதல் ஒன்றின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதை கனடா நிராகரித்துள்ளது. இந்த சந்தேகம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

“தூதரகத்தில் இருக்கும் ஊழியர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் தங்கியிருப்போர் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளதோடு அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கனடா உலக விவகாரங்கள் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கியூபாவுக்கான தூதரகம் தொடர்ந்து திறக்கப்பட்டிருந்தபோதும் சில சேவைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஊழியர் எண்ணிக்கை 16 இல் இருந்து எட்டாக குறைக்கப்படவுள்ளது.

சிறுவர்களுக்கு இவ்வாறான நோய் அறிகுறி ஏற்பட்டதை அடுத்து கடந்த ஏப்ரலில் ஹவானாவில் இருந்து இராஜதந்திரிகளின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடா நட்டவர்கள் கியூபா செல்லும் நிலையில், இது அச்சுறுத்தல் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கியூபா தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு இந்த சுகாதார பிரச்சினை முதல் முறை வெளிவந்தது தொடக்கம் கியூபாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக கனடா குறிப்பிட்டுள்ளது.

1959 கியூப புரட்சிக்கு பின் அமெரிக்கா போலன்றி கனடா அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை