அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்

மக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது அதனால் பயனடையவுள்ள மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்..

உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகித அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மனறங்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பெருமளவிலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். அந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகளை இனம்காணும் வகையிலான கலந்துரையாடல் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ. பொறலஸ்ஸ, உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி அந்தந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் இன்றியமையாத விடயமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது அதனால் பயனடையவுள்ள மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே அவிபிருத்தி திட்டங்களுக்கு தடைகளை விதிக்க முனைகின்றபோது அவற்றுக்கு எதிராக அமைச்சு செயற்படும்.

பொதுமக்களின் முறைப்பாடுகளை இலகுவாக தெரிவிப்பதற்கும் அதற்கான நடவடிக்கைகளை முகாமை செய்வதற்கும் ஏதுவாக ஸ்மார்ட் போன் செயலி (அப்) ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றோம். இச்செயலியின் மூலம் முறைப்பாடுகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் குறித்த உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் கவனத்திற்கு அது உடன் சமர்ப்பிக்கப்படுவதோடு உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு, பதவிநிலை அடிப்படையில்அமைச்சு மட்டம்வரைதானாக படிப்படியாக முன்கொண்டு செல்லும் வகையில் இச்செயலி உருவாக்கப்படவுள்ளது.

இதனால் உரிய காலத்துக்குள் முறைப்பாடு ஒன்று தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறினால் அது தொடர்பில் குறித்த அதிகாரி பதிலளிக்க வேண்டிய நிலை தானாகவே உருவாகுவதனால் மக்களின் முறைப்பாடுகளுக்கான தீர்வு விரைவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்த வேண்டிய தேவைப்பாடு உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தரமுயர்த்துவதற்கான தமது சபை அனுமதியினை பெற்று தனக்கு சமர்பிக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்– எஸ். அறூஸ்)  

Thu, 02/14/2019 - 11:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை