சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்

ஜாதிக பல சேனாவின் பொது செயலாளர்

சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பினையும் பெற்றுக்கொடுக்க முடியும் என ஜாதிக பல சேனாவின் பொது செயலாளர் சங்கைக்குரிய வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார். 

ஜாதிக பல சேனாவினால் முன்னெடுக்கப்படவுள்ள இன ஐக்கியத்துக்கான நாடுதழுவிய பிரசாரப் பணியின் முதலாவது நிகழ்வு நேற்றுமுன்தினம் (10)  அக்கரைப்பற்று நகரில் ஆரம்பித்து வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து   தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இன்று முஸ்லிம் கட்சிகளும், தமிழ் கட்சிகளும் பல்வேறுபட்ட பிரிவுகளாக பிரிந்து பல அரசியல் கட்சிகளாகவும் இயக்கங்களாகவும் செயற்பட்டு வருவது குறித்து கவலை அடைகின்றேன்.  

நாட்டில் கொடிய யுத்தம் ஒழிக்கப்பட்ட போதிலும் மக்களின் பிரச்சினைகள், சமாதானம், இன ஐக்கியம், இன நல்லிணக்கம் இன்னும் ஏற்படவில்லை.  

இதற்கு பிரதான காரணம் அரசியலை முன்னிறுத்தியே தற்போதுள்ள அனைத்து தலைவர்களும் செயற்பட்டு வருவதாகும்.  

இனரீதியான கட்சிகள் இலங்கை மக்களை கூறுபோட்டு வேற்றுமை உணர்வுகளை தோற்றுவிப்பதாகவும் அவர் கூறினார்.  

இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் துர்பாக்கிய நிலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே எமது பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  

இதில் மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என அனைவரும் ஒன்றிணைய முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அம்பாறை சுழற்சி நிருபர்)  

Tue, 02/12/2019 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை