பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் உள்நோக்கம் எனக்கில்லை

இறுக்கமான நிர்வாகம் மீள உருவாக வேண்டும் என்றே கோரினேன்

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், இனப்பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு காண அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவை ஏற்படுத்தினாலும் எமது கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது நிச்சயமென

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மானிப்பாயில் அண்மையில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தன.எனினும் யுத்தத்திற்குப் பின்னர் இப்பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளது. இந் நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டது. இதனால் வன்முறை கலாசாரம் கட்டவிழுத்துவிடப்பட்டது. தமிழ் இளைஞர், யுவதிகளின் உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய வன்முறைக் கலாசாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்கும் வகையிலேயே அன்றைய நிர்வாகம் குறித்து நான் பேசியிருந்தேன். யுத்தத்தில் பேரிழப்புக்களைச் சந்தித்த மக்கள் இனியும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது.

நான் ஒரு தாயாக, இந்த நாட்டின் பிரஜையாக, பாராளுமன்ற உறுப்பினராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குற்றங்களற்ற சூழலையும் , சமாதானத்தையும் , இன ஒற்றுமையையும் உருவாக்குவதற்கு உறுதியுடன் செயற்படுகிறேன்.வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேணடும்.இதுதொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிருப்பது பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்களே அன்று 02.07.2018 நான் அவ்வாறு உரையாற்ற மூலகாரணமாகியது. றெஜினா என்ற ஆறு வயது சிறுமியை கடத்திச்சென்று, சித்திரவதைப்படுத்தி, வன்புணர்வுக்கு ஆளாக்கினர். எனது உரைநிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இரண்டு பேர் வீட்டின் கூரைவழியே உட்சென்று பெண்ஒருவரை அவரது கணவன் முன்னிலையில் வன்புணர்வு செய்தனர். மானிப்பாய் எனுமிடத்தில் வயோதிபப்பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். தென்மராட்சி - சாவகச்சேரிப் பகுதியில் வாழ்ந்த பெண்ணின் வீட்டினுள் பலர் உட்புகுந்து கொள்ளையடித்தனர். இவ்வாறான சம்பவங்களால் நான் உணர்ச்சி வசப்பட்டிருந்தேன். பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான தாக்குதல்கள் எனது மன அமைதியை இல்லாமற் செய்துவிட்டன. எனவே, அதிகரித்துவரும் குற்றச்செயல்களை இல்லாதொழிக்க பயனுறுதிமிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். குற்றம் புரிந்தோருக்கு எதிராக எல்.ரீ.ரீயினர்

கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதுபற்றியே அன்று எனது உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

மீண்டும் எல்.ரீ.ரீ.யினர் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப்போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம் எனக்கு இருக்கவில்லை. நான் எப்போதும் சமூகங்களுக்கிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஆதரித்துவருகிறேன்.

எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டமை க்கும், எல்ரீரீயினர் மீண்டும் உருவாக வேண்டுமென ஆதரித்து பேசியதாக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டமைக்கும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

 

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை