எல்லைப்பதற்றம்; இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி

காஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா துரதிஷ்டவசமான சம்பவங்களில் ஈடுபட்டால் அதுபற்றிச் சிந்திக்காது உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு வானொலியில் புல்வாமா தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இந்த எச்சரிக்கையை முன்வைத்தார். புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய அரசாங்கம் தெளிவான உறுதியான ஆதாரங்களை வழங்கினால் அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், துரதிஷ்டவசமான சம்பங்களில் இந்தியா ஈடுபட்டால் அது குறித்து சிந்திக்காது உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். ''புல்வாமாவில் கடந்த 14 ஆம் திகதி இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல் பாகிஸ்தான் நலனுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. தீவிரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எல்லையில் ஊடுருவல் மூலம் 70 ஆயிரம் பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, தீவிரவாதம் குறித்து நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம். எனினும், எந்தவிதமான உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்திய அரசாங்கம் புல்வாமா தாக்குதல் தொடர்பில் எம்மீது குற்றஞ்சாட்டுகிறது.

இந்திய அரசு தெளிவான, உறுதியான ஆதாரங்களை அளித்தால் உரிய நடவடிக்கை பாகிஸ்தான் எடுக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா, பாகிஸ்தானில் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வேண்டும். இந்தியா தங்களின் உளவுத்துறையை முழுமையாகப் பயன்படுத்தி புல்வாமா தாக்குதல் குறித்த ஆவணங்களைத் திரட்டினால் இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைத்து விசாரணை நடத்தி, தாக்குதலுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் உதவி செய்யும் என்றும் இம்ரான் கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தீவிரவாதத்தை அழிப்பதற்கு நாம் முயற்சிகளை எடுத்துள்ளோம். தீவிரவாதத்தால் எமது நாடு இலட்சக்கணக்கான மக்களையும் பெருந்தொகை பணத்தையும் இழந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் போராடி வரும் போது எவ்வாறு தீவிரவாதத்தால் நாங்கள் பயனடைந்திருக்க முடியும்" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இராணுவத்தின் அடக்குமுறையால் ஒருபோதும் நீண்டகாலத்துக்கு தீர்வு காண முடியாது. வெற்றிகரமான வழியும் அல்ல.

இந்த விஷயத்தில் இந்தியா சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் விவகாரம் போன்று காஷ்மீர் விவகாரமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

புல்வாமா தாக்குதலுக்குப் பழிவாங்குவோம் என்று இந்திய அரசியல் தலைவர்கள் பேசுவதை ஊடகங்கள் வாயிலாக அறிகிறேன். அவ்வாறு பாகிஸ்தான் மண்ணில் இந்தியா தாக்குதல் நடத்தினால் நாங்கள் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து தகுந்த பதிலடி கொடுப்போம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

போரைத் தொடங்குவது எங்கள் கையில் இல்லை, தொடங்குவது எளிதானது. ஆனால், முடிப்பது கடினமானது. அவை எங்கள் கைகளில் இல்லை. பாகிஸ்தான் மண்ணை யாராவது தீவிரவாதச் செயல்கள் செய்வதற்கு பயன்படுத்தினால், அவர்கள் எங்களுக்கு எதிரிதான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Wed, 02/20/2019 - 13:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை