கிம் - டிரம்ப் சந்திப்பு வியட்நாமில் ஆரம்பம்

வியட்நாம் தலைநகர் ஹனோயில் நேற்று இடம்பெற்ற இரவு விருந்துடன் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான இரண்டாவம் சுற்று உச்சிமாநாடு நேற்று ஆரம்பமானது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான குறுகிய நேர சந்திப்பைத் தொடர்ந்து மெட்ரோபோல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு விருந்து இடம்பெற்றது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதத்தை களைவதற்கான திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக இரு தலைவர்களும் வியட்நாம் பிரதமர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை சந்தித்தனர்.

கடந்த ஜூன் மாதத்தில் முதல் முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியும், வட கொரிய தலைவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.

இருப்பினும், சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பெரிதாக ஒன்றும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. எனவே, அதில் பெரிய வெற்றி எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்த சந்திப்பில் முக்கியமான உடன்படிக்கைகள் எட்டப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமையே இரு தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த உச்சிமாநாட்டின் அட்டவணை என்னவென்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளும் புதிய வரலாற்றை படைக்க வியட்நாம் சிறந்த இடமாக இருக்கும் என்று நம்புவதாக ஹனோய் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

வியட்நாம் தன் ராஜதந்திர ஆற்றல்களை காண்பிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் ஆர்வமாக உள்ள இந்த நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க மற்றும் வட கொரிய உச்சிமாநாடு அங்கு நடைபெறுகிறது.

மேலும் 1986 ஆம் ஆண்டு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் உருவாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு, ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு வியட்நாமில் நடந்தபோது, அங்கு சென்ற டிரம்ப், வியட்நாமை சிறப்பான இடமாக உணர்வதாக கூறினார்.

டிரம்ப் மிகவும் விருப்பும் நாடாகவும், கிம்மின் நட்பு நாடாகவும் வியட்நாம் இருப்பதால் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இங்கு நடைபெறுகிறது.

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை