டொப்லர் ராடார்: ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர புதிய அமைச்சரவைப் பத்திரம்

வளிமண்டலவியல் திணைக்களம் தீர்மானம்

வானிலை பற்றிய முன்னறிவித்தல்களை வழங்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் வளிமண்டலவியல் திணைக்களம் கொள்வனவு செய்திருந்த டொப்லர் ராடார், வியாபார ஒப்பந்தத்தை முடிவுறுத்த,புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் 400 மில்லியன் ரூபாய் செலவில் இந்த டொப்லர் ராடாரை அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்திருந்தது. 

இந்த டொப்லர் ராடாரின் பழுதடைந்த பாகங்கள் 2017 ஏப்ரல் மாதத்தில் திருத்த வேலைகளுக்காக அமெரிக்காவில் உள்ள என்டர்பிரைஸ் இலக்ட்ரோனிக்ஸ் கூட்டுத் தாபனத்துக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு பழுதடைந்த பாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்ப 5.64 மில்லியன் ரூபா செலவாகியது.  

ஆனால், மேற்படி டொப்லர் ராடாரை திருத்துவதற்கான செலவும், புதிய ராடார் முறைமையை கொள்வனவு செய்யத்தேவைப்படும் செலவும் ஒரே தொகையாக இருக்குமென அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தத்தை நிறைவுறுத்தி, டொப்லர் ராடார் முறைமையை வாங்குவதற்குச் செலவாகிய 400 மில்லியன் ரூபாவில் பயன்படுத்தப்படாத மிகுதி 190 மில்லியன் ரூபாவை திரும்பிப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் டொப்லர் ராடாரில் தொழில்நுட்ப குறைகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  

இந்நிலையில் ஜெய்காவின் நிதியுதவியில் வாங்கப்பட்ட ஜப்பானிய டொப்லர் ராடார் முறைமையை பொருத்துவதில் சிறிதளவு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை 2021 லேயே நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.    

Wed, 02/27/2019 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை