வடக்கு நெற்செய்கையாளர்களுக்கு நஷ்டஈடு

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி நஷ்டஈடு வழங்கப்படும். இதனை விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர்முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.  

27/2நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000ரூபா வீதம் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. இந்த நஷ்டஈடு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மாவட்ட செயலகங்களின் ஊடாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

வடக்கில் வெள்ளத்தினால் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள் ,அழிவுகள் தொடர்பில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. முழுமையான அழிவு,பகுதியளவான அழிவு. சிறிய சேதம் என்ற அடிப்படையில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.  

வடக்கில் 50,000 ஏக்கர் நெற் செய்கை வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கமைய முழுமையாக நெற்செய்கை அழிவடைந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபா வீதம் வழங்கத் தீர்மானித்தோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட செயலகங்களில் நஷ்டஈடுகள் வழங்கப்படும். அதேவேளை வெள்ளத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கும் அழிவு ஏற்பட்டுள்ளதாக டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டினார். சோளப் பயிர்ச்செய்கைக்கு அழிவுகள் ஏற்பட்டிருந்தால் மாவட்ட செயலர் அதற்கு பரிந்துரை செய்தால் ஏக்கருக்கு 40,000 ரூபா நஷ்ட ஈடு வழங்க நான் தயார்.நிலக்கடலை செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் அதற்கான நஷ்டஈடு வழங்கப்படும். படைப்புழுவினால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் மாவட்ட செயலாளர். அதனை உறுதிப்படுத்தினால் நஷ்டஈடு வழங்கப்படும்.  

மகேஸ்வரன் பிரசாத்  

Sat, 02/09/2019 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை