மதுஷ் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் துபாய் தொடர்ந்தும் விசாரணை

கைதான மேலும் 16 பேர் தொடர்பில் விபரமறிய  இராஜதந்திர மட்டத்தில் இலங்கை முயற்சி

மாக்கந்துரே மதுஷ் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் துபாய் அரசாங்கம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள மேலும் சுமார் 16 பேர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துபாய் நாட்டைப் பொறுத்தவரை அங்கு போதைப் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்டுள்ள பொருட்களின் பாவனை மற்றும் கையிருப்புக்கு எவ்வகையிலும் மன்னிப்பு இல்லையென்றும் ஏனைய நாடுகளிடமிருந்து கிடைக்கும் மேன் முறையீடுகள் அந்நாட்டின் சட்டதிட்டங்களு க்கு உட்படுத்தப்பட மாட்டாதென்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்

தெரிவிக்கின்றன.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எவ்வகையான போதைப்பொருட்களை உட்கொண்டுள்ளனர், அவர்களது உடலில் எவ்வளவு போதைப்பொருள் உள்ளதென்பதை அறிவதற்காக கைது செய்யப்படோரின் இரத்த மாதிரிகள் தற்போது அந்நாட்டு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள 25 பேரும் அவர்கள் உட்கொண்டுள்ள போதையின் அளவை அறிந்து,அதற்கான தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே அது பற்றிய தகவல்களை இலங்கைக்கு வழங்க முடியுமென துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மதுஷ் தொடர்பான இலங்கையின் மேன் முறையீட்டை துபாய் அரசாங்கம் கவனத்திற் கொள்ள எவ்வகையிலும் வாய்ப்பு இல்லையென்றும் அவ்வதிகாரிகள் கூறினர்.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே இலங்கையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு எற்படுத்தப்படுமென்றும் ஆரம்ப விசாரணைகள் முடிவடையும் வரை இது பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிட முடியாதென்றும் அந்நாட்டின் உயரதிகாரி யொருவர் கூறினார். மேலும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாட்டுடன் கலந்துரையாடுவதற்கான எவ்வித நியாயாதிக்கமும் இல்லையென்றும் அதற்கிடையே நாடுகளுக்கூடாக இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்பட மாட்டதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இவ்விசாரணைகளுக்காக 14 நாட்கள் எடுக்கப்பட்டாலும்கூட அதன் முடிவுகளை அறிவிப்பதற்கு அதனிலும் அதிக நாட்கள் எடுக்கலாமென்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார். இச்சுற்றிவளைப்பின்போது இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த மாகாணசபை உறுப்பினர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர், சிறைச்சாலை அதிகாரி, பாடகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றபோதும் அவர்களுடைய பெயர்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எவ்வாறாயினும் இச்சம்பவத்தின்போது ஹோட்டலின் வரவேற்பறையில் இருந்த அங்கடெ லொக்கா, சம்பவ இடத்திற்கு துபாய் பொலிஸார் சென்ற சமயம் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ருக்‌ஷானா றிஸ்வி

 

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை