துறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

இலங்கை துறைமுக அதிகார சபையானது  www.news.slpa.lk  எனும் செய்தித்தள   இணையத்தளத்தை இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த இணையத்தளத்தை துறைமுகக் கப்பல் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்தநாயக்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். 

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், 'ஆசிய அபிவிருத்தி வங்கியானது, இலங்கை துறைமுக அதிகார சபையால் 2050ஆம் ஆண்டுவரை திட்டமிடப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி முதற்கட்ட ஆய்வின் பின்னர், கொழும்புத் துறைமுகத்தின்  அபிவிருத்திச் செயற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது' என்றார்.

மேலும், ஒலுவில் துறைமுகத்தை வர்த்தகத்  துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது. ஆகையால், இத்துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்திச் செய்வதற்காகக்  கடற்றொழில் அமைச்சிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன்,  இத்துறைமுகத்தைச் சுற்றி கைத்தொழில் பேட்டையொன்றை அமைக்கவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 'காங்கேசன்துறை துறைமுகத்தின் கப்பல் தளத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா 44மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கியுள்ளது. அதில் ஒரு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் மற்றையதை இலங்கை கடற்படைக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது'.

'திருகோணமலை துறைமுகத்தில் இரவுநேர நடவடிக்கைகளின் பொருட்டு ஜப்பான் அரசாங்கம் 01மில்லியன் யென் (ரூபாய் 1.5பில்லியன்கள்வரை)  முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.  அதேபோல், காலி துறைமுகத்திலும் இரவுநேர செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன' என்றார்.

இவ்வாறிருக்க, கப்பற்றுறையின் சட்டங்களை இலகுபடுத்துதல் தொடர்பில் அவதானம் செலுத்தும்போது தேசிய பாதுகாப்பு, துறைமுகப் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Fri, 02/22/2019 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை