ஐ.எஸ் பகுதியில் இருந்து கடைசி சிவிலியன்களும் வெளியேற வாய்ப்பு

இறுதிக்கட்ட தாக்குதலுக்கு அமெ.ஆதரவு படை தயார்

கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு நிலப்பகுதி மீது இறுதிக் கட்ட தாக்குதலை ஆரம்பிப்பதற்கு தயாராக அங்கு எஞ்சிருக்கும் கடைசி சிவிலியன்களையும் வெளியேற்ற அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2017 தொடக்கம் தோல்விளைச் சந்தித்து வரும் ஐ.எஸ் குழுவினரின் கடைசி கோட்டையாக யூப்ரடிஸ் பள்ளத்தாக்கில் ஈராக் எல்லையை ஒட்டிய பாகூஸ் சிறு கிராமப்பகுதி எஞ்சியுள்ளது.

எனினும் சிரியாவில் இருந்து தமது துருப்புகளை வெளியேற்றுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருக்கும் நிலையில், எட்டு ஆண்டுகள் நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாகூஸ் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் என்று சிரிய ஜனநாயகப் படையின் தலைமை ஊடக அதிகாரி முஸ்தபா பாலி குறிப்பிட்டார்.

நேற்றைய தினத்திற்குள் அந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

யூப்ரடிஸ் நதியின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கும் பாகூஸ் கிராமம் அமெரிக்க ஆதரவு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கிராமத்தில் எஞ்சியிருக்கும் ஐ.எஸ் போராளிகள் எண்ணிக்கை அல்லது அவர்களை தோற்கடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் போன்ற விபரங்களை சிரிய ஜனநாயகப் படை வெளியிடவில்லை.

இங்கு ஒரு சில நூறு வெளிநாட்டு ஜிஹாதிக்கள் எஞ்சி இருப்பதாக முன்னர் கணிக்கப்பட்டது.

பாகூஸ் கிராமத்தில் கடும்போக்கு ஜிஹாதிக்களே உறுதியாக தமது நிலையை தக்கவைத்துக் கொண்டிருப்பதாக சிரிய ஜனநாயகப் படை புதன்கிழமை குறிப்பிட்டது.

கடந்த புதன்கிழமை அந்த கிராமத்தில் இருந்து 2,000க்கும் அதிகமான சிவிலியன்கள் வெளியேறினர். பாகூஸ் கிராமத்தின் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை 20,000 பேர் வரை அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை