கொக்கேயின் விவகாரம் குறித்து ஆராய ஐ.தே.க குழு நியமனம்

பிரதமர் தலைமையிலான  பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் கொக்கேயின் பாவிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஐ.தே.க பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், எம்.பிக்கள் அடங்கலாக 24 பேர் கொக்கேயின் பயன்படுத்துவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றைய குழுக் கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொள்ளவில்லை என அறிய வருகிறது. இந்தக் குழுவில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஆசு மாரசிங்ச,நிஸ்ஸங்க நாணயக்கார ஆகியோர் அடங்குகின்றனர்.

இது தொடர்பில் நேற்று பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட சர்ச்சையில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல: ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆராயப்பட்டது. இது தொடர்பில் தகவல் வெளியிட்ட எம்.பி சபாநாயகரிடமோ, சி.ஐ.டியிடமோ கட்சித் தலைமையிடமோ எந்தப் பட்டியலையும் வழங்கவில்லை.

அவரின் கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.

ஐ.தே.க மற்றும் ஐ.தே.மு சார்பில் எனது தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அதன் அறிக்கையை விரைவில் கையளிக்க இருக்கிறேன்.

கட்சித் தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் சபாநாயகருடன் பேசினோம். சபாநாயகருக்கும் இது தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை