உடன் விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு மங்கள கடிதம்

துபாயில் கைதான மாக்கந்துரே மதுஷ் என்பவருடன் தனது ஊடகச் செயலாளர் ஒருவர் இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நபருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை தான் பெற்றுக் கொடுத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை ஆரம்பித்து உண்மை நிலையை நாட்டுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துமாறும் அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயங்கள் தொடர்பில் தன்னை தொடர்புபடுத்தி மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் உண்மைத்தன்மையை சிறிதும் ஆராயாமல் அவ்வாறே வெளியிட்ட ஊடக நிறுவனங்களின் பொறுப்புடையவர்கள் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விவரங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தன்னைப் பற்றி அவதூறான குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் தெரிவித்த நபர்களுக்கும் அவற்றை எவ்வித பொறுப்புமின்றி ஊடகங்களில் வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கையை தான் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது-

கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட மதுஷ் உள்ளிட்ட 25 பேரடங்கிய கும்பல் துபாயில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து எனது ஊடகச் செயலாளர் ஒருவருக்கு மதுஷுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்நபரை இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் நான் துபாய்க்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை நான் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாட்டில் முற்றாக மறுத்த போதும் நேற்றுமுன்தினம் 07 ஆம் திகதி பல மக்கள் பிரதிநிதிகள் செய்தியாளர் மாநாட்டை நடத்தி இவ்விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். தனியார் ஊடகங்களும் அதற்கு முழுமையான பிரசாரத்தை வழங்கியிருந்தன. பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே இக் குற்றச்சாட்டை அழுத்தமாகக் கூறியுள்ளார்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இராஜதந்திர கடவுச்சீட்டை நிதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் பெற்றுத் தந்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிதி அமைச்சின் மடியில் இருப்பதாகவும் அவர் செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களால் 30 வருடங்களுக்கு அதிக காலம் பாராளுமன்றத்தில் எனக்கிருந்த நற்பெயருக்கு இவர்கள் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.

மாக்கந்துரே மதுஷ் பற்றிய விசாரணைகளின்போது அவருக்கு உதவிய அரசியல்வாதிகள் மற்றும் அவரை நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வரை அழைத்துச் சென்றவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் விரைவில் அம்பலத்துக்கு வருமென்றும் அவர் தெரிவித்தார்.

 

Sat, 02/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை