தோட்ட தொழிலாளர் கூட்டு ஒப்பந்த விவகாரம்: பிரதமருடன் இன்று பேச்சு

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை முன்வைத்து இன்று மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் முற்போக்கு முன்னணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் திலகராஜ், வேலுகுமார் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் பீ. திகாம்பரம் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கிடைத்து வந்த வருமானத்தையும் இல்லாமற் செய்தே இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டுள்ளது.இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளமொன்றை பெற்றுக் கொடுப்பதில் தமிழ் முற்போக்கு முன்னணி ஒருபோதும் பின்னிற்காது என்றும் அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படைச் சம்பளம், வரவுக்கான 60 ரூபா, ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 140 ரூபா, பறிக்கும் கொழுந்துக்கு 50 ரூபா என்ற ரீதியில் சம்பள அதிகரிப்பு இடம் பெறவேண்டும். இதனையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் மனச்சாட்சியின்றி செயற்பட்டுள்ளனர்.

அம் மக்களின் நிலையையோ எதிர்காலத்தையோ கருத்திற்கொள்ளாது தன்னிச்சையான முடிவுடன் அவர்கள் செயற்பட்டு தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளனர்.

எந்த நிறுவனத்திலும் ஊழியர் சேமலாநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவை சம்பளத்தில் சேர்க்கப்படமாட்டாது. அவ்வாறு ஒரு நடைமுறை நாட்டில் கிடையாது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் அதனையும் சம்பளமாக சேர்த்துப் பார்த்தே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இது வேடிக்கையாகவுள்ளது.

இது தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையின் போது பிரதமருக்கு தெளிவுபடுத்தப்படும். எமது பேச்சுவார்த்தை வெற்றிபெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்காத பட்சத்தில் நாம் அரசாங்கத்தோடு இணைந்திருப்பதா இல்லையா என்பதை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை