மூன்று பொலிஸாருக்கு வெளிநாட்டு பயணத் தடை

காலி ரத்கமையில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், பொலிஸ்காரர்கள் இருவர்கள் மீதே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடை பற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கும் சி.ஐ.டி அலுவலகத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் சமுகமளிக்கவில்லை. கடந்த பல நாட்களாக இவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் இந்த வர்த்தகக் கடத்தல் மற்றும் கொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தற்போது பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் கபில நிசாந்த மற்றும் சப் இன்ஸ்பெக்டர் விராஜ் மதுசங்க ஆகியோருடன் தலைமறைவாகியுள்ள மூன்று பொலிஸ்காரர்களும் இவ்விரு வர்த்தகர்களின் கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேற்படி ஐந்து பொலிஸ் அதிகாரிகளுடன் மொத்தம் 13 பொலிஸார் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். முதல் ஐவரும் வர்த்தகர்களின் கடத்தல் மற்றும் கொலையுடன் குற்றம்சாட்டப் பட்டுள்ள அதேநேரம் ஏனைய 8 பேரும் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பொலிஸ் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படுவார்களென சி.ஐ.டி கூறுகிறது.

தலைமறைவாகியுள்ள பொலிஸ் அதிகாரிகளைத் தேடும் நடவடிக்கைகளை சி. ஐ. டி யினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் சடலங்களை அக்மீமனையில் இருந்து வலஸ்முல்ல பகுதிக்கு எடுத்துச்சென்ற கெப் வாகனமும் மீட்கப்பட்டுள்ளது. காலி குருந்துவத்தையைச் சேர்ந்த மர ஆலை சொந்தக்காரர் ஒருவரின் வாகனம் இது என்பது தெரிய வந்துள்ளது. இந்த கெப் வாகனம் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வும் தெரியவருகிறது.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை