சர்வதேச நாணய நிதியக் குழு அடுத்த வாரம் இலங்கை வருகை

இறுதிக்கட்ட உதவித்தொகை வழங்குவது குறித்து ஆராய ஏற்பாடு

சர்வதேச நாணய நிதியத்தினூடாக  இலங்கைக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட 1,500மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் ஆறாவது தவணை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராய்வதற்கென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. 

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைக் காரணமாக இந்த கடன் தொகை இலங்கைக்கு வழங்குவது தடைப்பட்டிருந்தது. இதனையடுத்தே ஐந்தாவது தவணைக் கடனை வழங்குவதற்கு முன்னதாக இப்பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை வரவுள்ளனர். 

2016முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலத்துக்குள் இலங்கைக்கு 1,500மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்திருந்தது. 

சர்வதேச நாணய நிதியம் நான்கு கட்டங்களாக இதுவரை 759.9மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க தெரிவித்தார்.  கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டின் அரசியல் குழப்பநிலை உருவானது. சர்வதேச நாணய நிதியத்துடன் எமக்கு வழங்க வேண்டிய அடுத்தகட்ட கடன் தொகை தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டிருந்தவாறு இப்பேச்சு இடம்பெறவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இலங்கைக்கு வழங்க வேண்டிய கடன் தொகை தொடர்பில் பேச்சு நடத்துவதற்குரிய ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒர் அரசாங்கம் அந்த காலகட்டத்தில் இருக்கவில்லை என்பதால் அவர்கள் இலங்கை வரவில்லை. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து மீண்டும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு அரசாங்கம் மீண்டும் உருவானது. இந்த அரசாங்கத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர மீண்டும் நியமிக்கப்பட்டார். 

அதன் பின்னர் மீண்டுமொரு முறை நாம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் அமெரிக்காவில் பேச்சு நடத்தினோம் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

இந்த பேச்சுவார்த்தையின்போது 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இலங்கை வருவதாக உறுதியளித்தனர். இதன்படியே எதிர்வரும் 15ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர். 

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த கடன் தொகையை இலங்கைக்கு பெற்றுத் தருவதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்திருந்தது. முதற்கட்டமாக 168.10மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. இரண்டாவது கட்டமாக 162.56மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. மூன்றாவது கட்டமாக 167.2மில்லியனை அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. நான்காவது கட்டமாக 251.4மில்லியன் அமெரிக்க டொலர்களையும் முறையே 2016ஜூன், 2016நவம்பர், 2017ஜுலை, 2017டிசம்பர் மாதங்களில் இக்கடன்தொகையை வழங்கியிருந்தது. 

இப்போது இறுதியாக வழங்கப்பட வேண்டிய கடன் தவணையையே சர்வதேச நாணய நிதியம் வழங்க உள்ளதென்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

 படம்: கல்லடி குறூப் நிருபர்

Sat, 02/09/2019 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை