ஈரான் வெளிவிவகார அமைச்சர் சாரிபின் இராஜினாமா நிராகரிப்பு

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் சாரிபின் இராஜினாமாவை அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரூஹானி நிராகரித்துள்ளார். ரூஹானி எழுதி இருக்கும் கடிதத்தில் சாரிபின் சாதனைகளை பாராட்டி இருப்பதோடு, “உங்களது இராஜினாமா நாட்டின் நலனுக்கு எதிரானது. அதனை நான் ஏற்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சாரிப் தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். வல்லரசு நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் சாரிப் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

எனினும் இந்த உடன்படிக்கையில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியதை அடுத்து உள்நாட்டில் சாரிப் மீதான அழுத்தங்கள் அதிகரித்தன. இந்நிலையில் நேற்று சாரிப்பின் இராஜனாமாவை ரூஹானி உத்தியோகபூர்வமாக நிராகரித்தார். “அமெரிக்காவின் பல அழுத்தங்களுக்கு எதிராக முன்னிலை வகிக்கும் நம்பிக்கை, தைரியம் மற்றும் பக்தியுடையவராக நீங்கள் இருப்பதாக நானும் உயர்மட்டத் தலைவரும் நம்புகிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெஹ்ரானில் நடைபெற்ற ஆர்மேனிய பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் சாரிபும் தோன்றினார்.

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை