இரண்டு வருடத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் தொகையில் வீழ்ச்சி

சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்களினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கண்டி பொது மருத்துவ மனையுடன் இணைந்ததாக சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கண்டி கெடபே விளையாட்டரங்கில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அந்நோயினால் அவதியுறும் சகலருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விரிவான வேலைத்திட்டங்களினூடாக இந்நோயினால் பீடிக்கப்படுவதை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழி முறைகளை அவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டபோது தமது பிரசார நடவடிக்கைகளுக்காக கிடைக்கப்பெற்ற நிதியைக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியமானது தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியினால் பலமான நிதியமொன்றாக விளங்குகின்றது.

அந்நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டினால் சிறுநீரக நோயாளர்களின் நலன்பேணல், சிகிச்சைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சிறுநீரக நோய் நிவாரணம் மற்றும் நோய்க் காரணியை கண்டறிதல் தொடர்பான ஆய்வுகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் எச்சரிக்கையுள்ள பிரதேசங்களில் சுத்தமான குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனுராதபுர சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை எதிர்வரும் மாதமளவில் மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது , சிறுநீரக நோயை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகரவின் சேவையை பாராட்டி விசேட விருதினை ஜனாதிபதி வழங்கினார்.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை