கொழும்பு மாணவர்களின் கல்வியில் கூட்டு அவதானம் அவசியம்

கொழும்பு மாவட்ட மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அம்மாணவர்களின் கல்வியில் கூட்டு அவதானம் அவசியம் என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வத்தளை, ஹுணுப்பிட்டிய சாஹிரா  மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட  புதிய கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு​ பாடசாலை அதிபர் எம்.எம். எம். ஹலீலின் தலைமையில் நேற்றுமுன்தினம் (24​) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கென மூன்று மாடிகளும், கனிஸ்ட பிரிவுக்கு மூன்று மாடிகளும்  நிர்மாணிக்கப்பட்டன. மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வேண்டுகோளுக்கிணங்க, இதற்கென ஐந்தரைக் கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, “கொழும்பு மாவட்ட மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகையின் அளவுக்கே, அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் உள்ளனர். எனினும், அம்பாறை முஸ்லிம்கள் கல்வியில் உயர்ந்துள்ளனர். எனவே, கொழும்பு மாணவர்களின் கல்வியில் கரிசனை காட்டுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் வழிகாட்டலும் தேவைப்படுகின்றது” என்றார்.

மேலும், “மேல் மாகாண முதலமைச்சர்,எவ்வித பேதமுமின்றி  கல்விக்காக  உதவியளிப்பதைப் பாராட்ட வேண்டும். அதேபோன்று எமது கட்சியின் முக்கியஸ்தரான மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கொழும்பு மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு படுகின்றார்.  தேர்தலில் அவர் வழங்கிய பிரதான வாக்குறுதியும் இதுவாகவேயிருந்தது” என்றார்.

முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர  ரணதுங்க, மாகாண சபை உறுப்பினர்களான ஜோர்ஜ் பெரேரா,சாபி ரஹீம், சமூக சேவகர்  ஹுசைன் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். 

(தெஹிவளை கல்கிசை தினகரன் நிருபர்)

Tue, 02/26/2019 - 12:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை