தேர்தல் ஆணைக்குழு தலைவர் தேசப்பிரிய சபை முதல்வரிடம் வேண்டுகோள்

தேர்தல் சட்டத்தை முறையானதாக்கும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன் றை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்தல் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான நீதியுமானதுமான தேர்தலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். அதற்கான செயற்பாடுகளை பலப்படுத்தல், அனைத்து வாக்காளர்களினதும் வாக்குகளை முறையாகப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு தற்போதைய தேர்தல் சட்டத்தை முறையாக அமைப்பது காலத்தின் தேவையாகவுள்ளது என்றும் அவர் அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பாராளுமன்ற சபை முதல்வருக்கு இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 1956 ஆம் ஆண்டிலிருந்து சகல தேசிய தேர்தலுக்குப் பின்னரும் தேர்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் தேசிய அடையாள அட்டையை கட்டாயமாக்குவது, தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அண்மைக் காலமாக தேர்தல் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பான சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படவில்லை.

பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், சிவில் அமைப்புகள் ஆகியன தேர்தல் செயற்பாடுகள் நீதியானதாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக தேர்தல் சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பிலும் தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமாக விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது என தேர்தல் ஆணைக்குழு கருதுகிறது. அதற்கமைய தேர்தல் சட்டத்தை பலப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து அதன் சிபாரிசுக்கிணங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தேர்தல் ஆணையாளர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ஸ)

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை