அதிவேக இரட்டைச் சதம் பெற்று பானுக்க ராஜபக்ஷ புதிய சாதனை

பி.ஆர்.சி கிரிக்கெட் அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ, இலங்கையின் முதல்தரப் போட்டிகளில் அதிவேகமாக பெறப்பட்ட இரட்டைச் சதத்தை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் முதல்தரக் கழகங்கள் இடையிலான கிரிக்கெட் தொடரின், பிளேட் சம்பியன்ஷிப் சுற்றில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இலங்கை துறைமுக அதிகார சபைக்கு எதிரான போட்டியின் போதே பானுக்க ராஜபக்ஷ இந்த சாதனையை படைத்துள்ளார். 

27 வயதான பானுக்க ராஜபக்ஷ தனது சாதனை இரட்டைச் சதத்திற்காக வெறும் 129 பந்துகளினை மாத்திரமே எடுத்துக் கொண்டிருந்தார். மேலும், பானுக்க குறித்த போட்டியில் மொத்தமாக 173 பந்துகளில் 19 சிக்ஸர்கள் மற்றும் 22 பெளண்டரிகள் அடங்கலாக 268 ஓட்டங்களை குவித்து தனது சிறந்த முதல்தர இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தையும் பதிவு செய்திருந்தார். 

பானுக்கவின் இரட்டை சத உதவியோடு பி.ஆர்.சி அணி இலங்கை துறைமுக அதிகார சபைக்கு எதிரான போட்டியில், தனது முதல் இன்னிங்ஸிற்காக 629 என்ற இமாலய ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் பானுக்க ராஜபக்ஷ, தனது இந்த இரட்டைச் சதம் மூலம் முதல்தரப் போட்டிகள் வரலாற்றில் அதிவேகமாக இரட்டைச்சதம் பெற்ற ஆறாவது வீரராகவும் மாறியுள்ளார். 

முதல்தரப் போட்டிகள் வரலாற்றில் அதிவேக இரட்டைச்சதத்தினை பதிவு செய்த வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் சபீகுல்லாஹ் சின்வாரி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சபீகுல்லாஹ் சின்வாரி தனது அதிவேக இரட்டைச் சதத்தினை 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்தில் ஆப்கான் உள்ளுர் முதல்தர கிரிக்கெட் போட்டியொன்றில் வெறும் 89 பந்துகளில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Mon, 02/04/2019 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை