'ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியும்'

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பிரதான நாட்டுத் தலைவர்கள் மூவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதால் உடனடியாக உடன்படக்கூடிய விடயங்களை உள்ளடக்கி அரசியலமைப்புத் திருத்த யோசனையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியுமானால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.  

பிரதான தலைவர்கள் மூவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு உடன்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,  "நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குத் தயாரென ஐ.தே.க தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்துள்ளார். ஆனால், சு.கவும் ஐ.ம.சு. முவும் இது தொடர்பில் தெளிவாக எதனையும் கூறவில்லை. 2015 ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே பிரதான தலைப்பாக இருந்தது. 2015இல் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பான மோசமான முன்மாதிரிகள் வெளிக்காட்டப்பட்டன.

ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததால், அதன் பின்னணியில் உண்மையான அர்ப்பணிப்பின்றி அரசியல் நோக்கமே மறைந்திருந்தது. எந்த நோக்கம் இருந்தாலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மூன்று தலைவர்களும் முன்வந்திருப்பது சாதகமான  நிலைமையாகும். இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.          (பா)

Wed, 02/27/2019 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை