ATM மோசடி; சீனர் இருவர், ருமேனியருக்கு விளக்கமறியல்

Rizwan Segu Mohideen
ATM மோசடி; சீனர் இருவர், ருமேனியருக்கு விளக்கமறியல்-Credit-Debit Card ATM Scam-Arrested

ATM அருகில் சந்தேக நடமாட்டம் தொடர்பில் அறிவிக்கவும்

ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மூலம் போலி அட்டைகளை தயாரித்து பணம் பெற்று வந்த சீனர்கள் இருவர் மற்றும் ருமேனியா நாட்டவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் தகவல்களை பயன்படுத்தி, போலியான அட்டைகளை தயாரித்து ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் பெற்றுவந்த சம்பவங்கள் தொடர்பில்,

ஏடிஎம் இயந்திரங்களில் அட்டைகளை செலுத்தும் இடத்தில் சிறிய உபகரணம் ஒன்றை வைத்து அதன் மூலம், குறித்த ஏடிஎம் இயந்திரங்களில் செலுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் தகவல்களை, சந்தேக நபர்கள் தங்களது கையடக்க தொலைபேசியில் நேரடியாக பெற்று, போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெற்று வந்த கும்பலை கைது செய்வது தொடர்பில், குற்றவியல் விசாரணை திணைக்களத்தால் (CID) இரண்டு வாரங்களுக்கு முன்னிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடந்த ஜனவரி 20 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சதாம் வீதி பகுதியில் சீனர் ஒருவரும் ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளவத்தைப் பிரதேசத்தில் மற்றுமொரு சீனர் ஒருவரும் பெப்ரவரி மூன்றாம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் ருமேனியாவாசி ஒருவரும் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிரெடிட், டெபிட் அட்டைகள் மற்றும் ரூபா 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம் தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இரண்டு ஆகியவற்றை CID யினர் கைப்பற்றியுள்ளனர்.

சீனர்கள் இருவரும் கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை பெப்ரவரி 13 ஆம் திகதி வரையும், ருமேனியாவைச் சேர்ந்தவரை பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அவரை பெப்ரவரி 18 ஆம் திகதி வரையும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

குறிப்பாக CCTV கமெராக்களில் அகப்படாதிருக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்தவாறு, ATM இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பில், உடனடியாக பொலிஸ் அதிகாரிகளிடம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்நடவடிக்கைகள் குற்றவியல் சட்டம் மற்றும் கொடுப்பனவு உத்தி தடுப்பு சட்டங்களின் கீழ் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Wed, 02/06/2019 - 17:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை