வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு

படகுடன் 2 பேர் கைது

இலங்கை கடற்படையினர் 86.4 கிலோ கேரள கஞ்சாவை வடபகுதிக் கடலில் கைப்பற்றி உள்ளனர். டிங்கி படகினூடாக இந்த கேரளக் கஞ்சா கடத்தப்பட்ட போதே, நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் இது கைப்பற்றப் பட்டுள்ளது.இதன்போது படகிலிருந்த இரண்டு நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பருத்தித்துறைக்கு வடக்கே கடலில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாகச் செல்லும் டிங்கி படகொன்றை சுற்றிவளைத் துள்ளனர். இப்படகை சோதனையிட்டபோதே அதற்குள் 86.4 கிலோ கேரள கஞ்சா உரப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை இரண்டு பொதிகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. டிங்கி படகு, அதிலிருந்த இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றை கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா இந்தியாவி லிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டவையாக இருக்கலாமென கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

நாட்டிலிருந்து போதைப் பொருளை ஒழிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை கடற்படையினரும் அயராத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இலங்கை கடற்படையினர் அண்மைக்காலமாக கடலில் முன்னெடுத்து வந்த தேடுதல்களின்போது ஆறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 442.2 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை