பாரிஸ் குடியிருப்பு கட்டிடத்தில் மூண்ட தீயினால் 8 பேர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எட்டு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இந்தத் தீயில் ஆறு தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்திருப்பதோடு ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாதபோதும் இது வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பாரிஸ் அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீ தொடர்பில் பெண் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அந்தக் கட்டிடத்திலேயே வசிக்கும் குறித்த பெண் கார் தரிப்பிடத்தில் தீ வைக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே தீ சீற்றத்தோடு பரவியுள்ளது.

இந்நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தீயணைப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

1970களில் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் இரு மாடிகளில் தீ பரவியதை அடுத்து அதில் இருந்து தப்புவதற்கு சில குடியிருப்பாளர்கள் கூரை மேல் ஏறியுள்ளனர். இதனால் கூரையில் இருந்து 30 பேர் வரை தீயணைப்பு படையினரால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 250 தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடினர்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை