71 வருடங்கள் கடந்த பின்பும் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கவில்லை

தாய்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 71 வருடங்கள் கடந்த போதிலும் நாட்டு மக்களின்  மனங்களில் சுதந்திரமான எண்ணங்கள் தோன்றாதவரை அது உண்மையான சுதந்திரமாக இருக்காது என்று இரத்தினபுரி மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கருணாரட்ன பரணவிதாரன கூறினார்.  

இரத்தினபுரி  மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய தினம் நேற்று முன்தினம் (04) மாவட்ட செயலாளர்  திருமதி மாலனி போத்தாகம தலைமையில் இரத்தினபுரி  சீவலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாம் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். குறிப்பாக அரசியல், நிர்வாகம், ஊழல்  மோசடி மற்றும் இதர பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.இதிலிருந்து விடுதலை பெற வேண்டும். 

அண்மை காலமாக மேற்படி சவால்களுக்கு முகங்கொடுக்கும் அதே வேளை பல வெற்றிகளையும் கண்டுள்ளோம். அந்த வெற்றிகளை நாம் பாதுகாப்பதுடன் அதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும். 

அத்துடன் எமது தோல்விகளை வெற்றிக்கொள்ள நாம் ஒற்றுமையாக இலங்கையர்  என்ற போர்வையில் செயற்பட வேண்டும்.எம்மிடையேயும் எம்மனதுகளிலும் ஒற்றுமை என்ற எண்ணம் இல்லையென்றால் எமக்கு கிடைத்த சுதந்திரத்தில் எந்த பயனும் இல்லை. எமது எண்ணம் சிறந்ததாகவிருக்க வேண்டும். எண்ணத்தில் அழுக்குகள் அல்லது குறைகள் காணப்பட்டால் அதனால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எவ்விதமான பயனும் இல்லை. அத்துடன் நாடு 70 வருடங்களுக்கு முன்னதாக பெற்ற சுதந்திரம் கூட பயனற்றுப் போய் விடும். நாம் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமாயின் எமது உள்ளங்கள் தூய்மையடைய வேண்டும்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்றால் எம்மிடையே ஒற்றுமை அவசியம். அதற்கு உள ஒற்றுமை அவசியம். அத்துடன் கல்வி, ஜனநாயகம், வியாபாரம், அபிவிருத்தி, அரசியல், சமூகம், சுகாதாரம் அனைத்திலும் சுதந்திரம் இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டிலும் நாட்டு மக்களிடமும் உண்மையான சுதந்திரம் காணப்படும் என்றார்.

(இரத்தினபுரி தினகரன் நிருபர்)    

Wed, 02/06/2019 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை