71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ள பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி, 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் வேண்டி பிரார்த்தித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைப்பதையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகவும் அச்செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்,ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றையும்அனுப்பி வைத்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான பரஸ்பர உறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புட்டின், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் மேம்படுமென தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்,ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றையும்அனுப்பி வைத்துள்ளார்.

71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து சகோதர இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய ஜனாதிபதி, தனது அன்புக்குரிய நாட்டு மக்களின் நலனுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் மக்கள் நேய நிகழ்ச்சித் திட்டங்களையும் பாராட்டியுள்ளார்.

சகோதர அயல் நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் வரலாற்று முக்கியத்துவமிக்க பிரிக்க முடியாத உறவுகள் இருந்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய ஜனாதிபதி, நெருங்கிய சகோதர நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை கொண்டுவரும் வகையில் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Mon, 02/04/2019 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை