‘துறுணு திரிய’ கடன் திட்டத்தின் கீழ் 583 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

சிறிய மற்றும் நடுத்தர இளம் தொழில் முனைவோரினை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'என்ரபிறைஸ் சிறிலங்கா – இலங்கை வங்கியின் துறுணு திரிய' கடன் திட்டத்தின் கீழ், இதுவரை  583வரையான  இளம் தொழில் முனைவோரிற்கு 242 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (27) இலங்கை வங்கியினால் வெளியிடப்பட்ட வாராந்த முன்னேற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'துறுணு திரிய' கடன் திட்டத்தின் கீழ் 25 மாவட்டங்களிலும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அனைத்து மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இளம் தொழில்முனைவோரிற்கு வழங்கப்பட்ட கடன்களில், இரத்தினபுரி மாவட்டம் 94 கடன்களை வழங்கி மாவட்ட ரீதியில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை, மாகாண ரீதியான கடன் வழங்கலில் சப்ரகமுவ மாகாணம் 116 கடன்களை வழங்கி முன்னிலை வகிக்கின்றது. மேலும், கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது, மாத்தறை மாவட்டத்தின் கடன் வழங்கல் 22% ஆல் அதிகரித்துள்ளதோடு, அதிக எண்ணிக்கையான கடன்கள் அழகுக்கலை துறையினைச் சார்ந்த இளம் தொழில் முனைவோரது கைகளிற்கே சென்றடைந்துள்ளது.

இலங்கை வங்கியானது, பிரதமஅமைச்சர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் (PDO), தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவப் பிரிவு (CPMU), மற்றும் சிறிய முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரிவு(SEDD) என்பவற்றுடன் இணைந்து இளம் தொழில்முனைவோரிற்கு நிதி உதவியினை வழங்குவதற்காக 'துறுணு திரிய' கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இலங்கை வங்கியின் 'துறுணு திரிய' கடன் திட்டத்தின் கீழ், 3 வருடங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகள் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க தொழில்சார் தகைமைகளைக் கொண்ட 40 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோரிற்கு உத்தரவாதமற்ற மற்றும் பிணைகளற்ற அல்லது இலகுபடுத்தப்பட்ட பிணை நிபந்தனைகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. இக்கடன் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை நாடு தழுவிய ரீதியில் இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் மற்றும் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

Wed, 02/27/2019 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை