தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு ஜனாதிபதி முழு ஆதரவு

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (20) நடைபெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதியை மாணவச் சிறார்கள் அழைத்து வருகின்றனர்.

சிறுவர்களை பாதுகாக்க  தேசிய நிதியம் - ஜனாதிபதி

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறுவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட சமூக ஆய்வறிக்கைகளை பெற்று, சிறுவர்களுக்காக அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலமாகவும் துரிதமாகவும் முன்னெ டுக்க இதன் மூலம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (20) நடைபெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு பேசிய ஜனாதிபதி: இன்று ஏற்பட்டிருக்கும் பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து விரிவான சமூக கருத்தாய்வு அவசியமாகும். இன்றைய சிறுவர் தலைமுறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அனைத்து துறைகளிலும் விரிவான கலந்துரையாடல் நடத்துவதே இதன் நோக்கமாகும்.

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது பெற்றோர்களுக்கு அது பற்றி அறிவூட்டுவது அவசியம். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்வது பற்றிய தீர்மானத்திற்கு தானும் உடன்படுகிறேன்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கியமான தடை தாண்டல் அல்ல. இப்பரீட்சையால் பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

தேசத்தின் உயிர்நாடியான சிறுவர் தலைமுறையை பாதுகாப்பதற்காக அவர்களது உடல், உள அபிவிருத்திக்கு சிறந்ததோர் சூழலை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமாக “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

 

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை