நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு; மொத்தச் செலவீனம் ரூ. 4550பில்லியன்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் சார்பில் சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சபையில் சமர்ப்பித்தார். 

இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4550பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இதில் அரசாங்கம் கடன்பெறக்கூடிய தொகை 2160பில்லியன் ரூபாயாகும் என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான மொத்த மூலதனச் செலவீனம் 2184பில்லியன் ரூபாவாகவும், மீண்டு வரும்  செலவீனம் 2365பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.  

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு மாத்திரம் 393பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு 14பில்லியன் ரூபாயும், பிரதமர் அலுவலகத்துக்கு 2பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுக்கு 187பில்லியன் ரூபாய்களும், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு 292பில்லியன் ரூபாய்களும், பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 263பில்லியன் ரூபாய்களும், கல்வி அமைச்சுக்கு 105பில்லியன் ரூபாய்களும், விவசாய அமைச்சுக்கு 114பில்லியன் ரூபாய்களும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சுக்கு 127பில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கம்பெரலிய, பிராந்திய கிராமிய அபிவிருத்தி, கிராமசக்தி போன்ற கிராம பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு 77பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்களைச் செலுத்துவதற்காக 785பில்லியன் ரூபாய்களும், ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக 222பில்லியன் ரூபாய்களும், சமுர்த்திக் கொடுப்பனவுக்கு 50பில்லியன் ரூபாய்களும், மருந்துப் பொருட்களுக்காக 45பில்லியன் ரூபாய்களும், உரங்களுக்கு 35பில்லியன் ரூபாய்கள் உள்ளடங்கலாக வட்டியில்லாத மீண்டெழும் செலவீனங்களுக்காக 1425பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூலதன செலவீனங்களில் வீதிகளுக்காக 202பில்லியன் ரூபாய்களும், கல்விக்காக 102பில்லியன் ரூபாய்களும், சுகாதாரத்துக்காக 55பில்லியன் ரூபாய்களும்,வீடமைப்புக்காக 40பில்லியன் ரூபாய்களும், விவசாயத்துக்காக 26பில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடன்களுக்கான ஒதுக்கீடு உள்ளடங்கலாக அரசாங்கத்தின் மொத்தச் செலவீன ஒதுக்கீடாக 4376பில்லியன் ரூபாவாகும். இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முப்படைகள், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு 306பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 290பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன. 

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க முடியாது போனது. இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால நிதியொதுக்கீடு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே 2019ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)  

Wed, 02/06/2019 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை