அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 300 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 300 வீடுகளைக் கொண்ட மாதிரி வீட்டு திட்டமொன்றை. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினா் ஏ.எல். நஸீர் தெரிவித்தார்.

இவ்வீட்டுத் திட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் எஸ்.கலங்சூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த கால யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வீட்டு வசதியின்றி தொடர்ந்தும் கஷ்ட நிலையில் வாழ்ந்து வரும் மக்களின் நிலை குறித்து வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்ததையடுத்து இப்பிரதேசத்திற்கு 300 வீடுகளை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வேலைத் திட்டத்திற்கு வீடற்ற வருமானம் குறைந்த குடும்பங்களின் தகவல்களை குறித்த பிரதேசத்திலிருந்து பெற்று மாவட்ட வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்க வேண்டியுள்ளது.

எனவே, இதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் துரிதமாக செயற்பட்டு நேர்த்தியான தகவல்களை உடன் வழங்குவதுடன் அரச அதிகாரிகள், அரசியல் தலைமைகளுடன் இணைந்து மக்களுக்கான பணிகளை துரிதமாக வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

அம்பாறை சுழற்சி நிருபர்

Sat, 02/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை