தென்னாபிரிக்கா - இலங்கை 2 ஆவது டெஸ்ட் இன்று

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

நேற்றுமுன்தினம் இரண்டாவது போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, குசல் மெண்டிஸ் கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள காரணத்தால், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், குசல் மெண்டிஸின் உபாதை குறித்த முழுமையான விபரம் வெளியிடப்படும் எனவும் அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் குசல் மெண்டிஸ் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை அணிக்கு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால் போன்ற மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமைக்கு மத்தியில், இலங்கை அணி புதிய வீரர்களைக் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. தற்போது குசல் மெண்டிஸின் உபாதை அணிக்கு மற்றுமொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடத்தில் இலங்கை அணிக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களை கடந்திருந்த மெண்டிஸ், 2018ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

தொடர்ந்து இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக ஆடிய இவர் அவுஸ்திரேலிய தொடரில் ஓரளவு பிரகாசித்திருந்தார். எனினும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில், வெறும் 12 மற்றும் 0 என்ற ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்து ஏமாற்றமளித்திருந்தார். தற்போது, உபாதைக்கு முகங்கொடுத்துள்ள குசல் மெண்டிஸ், இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக அடுத்தப் போட்டியில், அஞ்செலோ பெரேரா டெஸ்ட் அறிமுகத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்னவும் தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக குழாத்திலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹசித பெர்னாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்க அணி தனது சொந்த மண்ணில் தோல்வியுற்றதால் அந்த அணிக்கு மிகவும் அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் வேனன் பிளான்டர் இரண்டாவது ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் இவர் சரியாக பந்து வீசாத காரணத்தினாலேயே தோல்வியடைந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் வியன் முல்டர் அவரது இடத்தை நிறப்புவார் என எதிர்வு கூறினார்.

இலங்கை அணி கடைசி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலக சாதனை நிலை நாட்டியது.அந்த வெற்றிக்கான காரணம் குசல் பெரேராவை சாரும்.அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை