எகிப்து ரயில் நிலையத்தில் 'தீ' பரவி 25 பேர் உயிரிழப்பு

எகிப்து தலை நகர் கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

நகர மையத்தின் ரம்சஸ் ரயில் நிலையத்தில் ரயில் வண்டி ஒன்று கொங்ரீட் தடுப்பு ஒன்றில் மோதியதை அடுத்தே இந்த தீ ஏற்பட்டதாக தேசிய ரயில்வே அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தை அடுத்து ரயிலின் எரிபொருள் தொட்டி வெடித்து, நடைமேடை மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல டஜன் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. “நான் நடைமேடையில் இருந்தேன். ரயில் வேகமாக தடுப்பில் மோதுவதை கண்டேன்” என்று சம்பவத்தை பார்த்த மினா கலி என்பவர் ரோட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“எல்லோரும் ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தார்கள், ஆனால் எஞ்சின் வெடித்து பலரும் உயிரிழந்தனர்” என்றும் அவர் விபரித்தார்.

மோசமான முகாமைத்துவம் மற்றும் போதிய முதலீடுகள் இன்மையால் எகிப்தின் ரயில் கட்டமைப்பு பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறது.

கடந்த 2017 ஓகஸ்டில் துறைமுக நகரான அலெக்சான்ட்ரியாவுக்கு அருகில் இரு பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

2002 ஆம் ஆண்டு அதிக பயணிகளை ஏற்றி இருந்த ரயிலுக்குள் தீ பரவியதில் 370 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் எகிப்தில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக பதிவாகியுள்ளது.

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை