இலங்கை 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா 170 ஓட்டங்கள் முன்னிலை

டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தென்ஆபிரிக்கா−இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது.

விக்கெட் காப்பாளர் டி காக் அதிகபட்சமாக 80 ஓட்டங்கள் பெற்றார். பவுமா 47 ஓட்டங்களும், டு பிளிசிஸ் 35 ஓட்டங்களும், மகாராஜ் 29 ஓட்டங்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜித 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்கள் எடுத்திருந்தது, கருணாரத்ன 28 ஓட்டங்களுடனும், பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்ன மேலும் இரண்டு ஓட்டங்கள் அடித்து 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் பெர்னாண்டோவும் மேலும் 2 ஓட்டங்கள் எடுத்து 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தது. குசல் பேரேரா (51) மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். டி சில்வா 23 ஓட்டங்களும், அறிமுக வீரர் எம்புல்தெனிய 24 ஓட்டங்களும் அடிக்க இலங்கை 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த ஓட்டம்தான் இந்த போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருக்க வாய்ப்புள்ளது. 44 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென்ஆபிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்த போது தென்னாபிர்க்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் பெற்றுள்ளது.அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக எல்கர் 35 ஓட்டங்களுடனும் மார்கம் 28 ஓட்டங்களுடனும் ஹசிம் அம்லா 16 ஓட்டங்களுடனும் பவுமா 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றனர்.பின்னர் அணியின் தலைவர் பிளசிஸ் 25 ஓட்டங்களுடனும் குயின்டன் டி கொக் 15 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.பந்து வீச்சில் எம்புல்தெனிய 2 விக்கெட்டையும் ராஜித,விஷ்வா தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர். தென்னாபிரிக்க அணி 170 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.அத்துடன் அவ்வணிக்கு கைவசம் 6 விக்கெட்கள் உள்ளது. இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை