பாராளுமன்றத்திற்கு புதிதாக 12 மின்தூக்கிகளை பொருத்த முடிவு

பாராளுமன்றத்திற்குப் புதிதாக 12மின்தூக்கிகளை கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். இதற்கான கேள்வி மனு, விரைவில் கோரப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.  

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது 12எம்.பிக்கள் பயணித்த மின் தூக்கி செயலிழந்ததால் அவர்கள் 20நிமிடத்திற்கு மேல் மின் தூக்கிக்குள் சிக்கியிருந்தனர்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசாரணை மேற்கொண்டதுடன் சம்பந்தப்பட்ட மின்தூக்கி நிறுவன பிரதிநிதிகளையும் அழைத்து விளக்கம் கோரியிருந்தார்.  

பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்தூக்கிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் பரிசோதித்ததோடு அவற்றுக்குப் பதிலாக புதிய மின்தூக்கிகளைப் பொருத்துமாறும் குறித்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அறிய வருகிறது. இம் மின்தூக்கிகள் 1982பொருத்தப்பட்டன. 37வருடங்கள் பழமைவாய்ந்த, இவற்றை அகற்றுவது உகந்தது எனவும் குறித்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.  

புதிய மின்தூக்கிகளை கொள்வனவு செய்யும் வரை பழைய மின்தூக்கிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்தையில் ஒரு மின்தூக்கியின் பெறுமதி ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்தூக்கி செயலிழந்த விவகாரம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு இது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மின்தூக்கி விவகாரம் தொடர்பில் சபாநாயகர் இன்று (20) சபையில் விசேட அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அறிய வருகிறது.இதேவேளை, நாட்டிலுள்ள மின்தூக்கிகள் எதுவும் பதியப்படவில்லை எனவும் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளமை தெரிந்ததே.(பா)  

Wed, 02/20/2019 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை