வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03 மாத காலத்துக்குள் தீர்வு

யாழ்ப்பாணத்தில் பிரதமர் அறிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தேவைகளை ஆராய்ந்து 3 மாத காலத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நாம் மூன்று மாதத்தில் மீண்டும் இங்கு வடக்குக்கு வருவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுகையில் மஹிந்த அணியினர் நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர். அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எந்த யோசனையையும் அதற்காக முன்வைக்காத நிலையிலேயே அவர்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைபுக்கான நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. அவர்களது காலத்தில் சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்த யோசனைகளுக்கு எதிராக இப்போது அவர்களே விமர்சித்து வருவது விந்தையாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டைப் பிளவுபடுத்துவதென்றால், அதற்கு வழிவகுப்பவர்கள் அந்தத் தரப்பினரே, நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்கள் அவருடன் சேரலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள அந்த அணியினர் அரசாங்கத்தினால் நாம் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து வரும் ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும், எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நுண்கடன் சுமைகளில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிசாட் பதியுதீன், ராஜித சேனாரட்ண அகிலவிராஜ் காரியவசம், அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பி.க்களான எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமிய மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாய நடவடிக்கைகளுக்காக நுண்கடன்களைப் பெற்றுக் கடனை மீளச் செலுத்த முடியாது, நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். தமது நிலமைக்கு நுண்கடன் புதிய தீர்வைப் பெற்றுத்தரும் என சிந்தித்து செயற்பட்ட மக்கள் அதிக வட்டி காரணமாக கழுத்து நெரிக்கப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசாங்கம் அவர்களை சுமையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் நான் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதற்காக 1,400 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் மங்கள சமரவீர ஒதுக்கியுள்ளார்.

வறட்சி தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் எனப் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலும், பெண்களே கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சுமைகளைக் கொடுத்த அத்தகைய திட்டத்திற்கு பதிலாக, அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் என்டபிறைஸ் ஸ்ரீலங்கா கடன்திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். அக்கடனைப் பெற்றுக்கொள்வதில் வடக்கு மக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமாக இருந்தால், அதனை அறியத்தரவும்.

நாட்டில் முன்னொரு போதும் இல்லாத வகையில் இந்தப் புதிய திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வடக்கு மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கில் 5,000 ஏக்கரில் தெங்குப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதில் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அரிய சந்தர்ப்பம் வழங்கப்படும்.

வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. என்டபிறைஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய, “அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டம், வீதிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் பிரதிபலன்களை சில மாதங்களில் மக்கள் அநுபவிக்க முடியும். நாடு முகம் கொடுத்துள்ள கடன் சுமையை நிவர்த்தி செய்துகொண்டே, இத்தகைய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடன் சுமையைப் பொறுத்தவரையில், அரசாங்கம் இந்த வருடத்தில் மாத்திரம் 655 டொலர் பில்லியன் ரூபாவை தவணையாக செலுத்த வேண்டியுள்ளது.

நாட்டில் நாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நல்லிணக்கத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்குத் தெற்கு மக்களுக்கிடையில் சிறந்த நல்லுறவை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.

அரசியல் தீர்வு மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல வகைகளிலும், அதற்கான எதிர்ப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் வடக்கு மக்களும் நின்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்படும். அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்படுவது முக்கியம் தற்போது, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அது நல்லிணக்கத்திற்கு சிறந்ததொரு முயற்சி. எனினும், தமிழில் தேசிய கீதம் இசைப்பதன் மூலம், நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக சிலர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில், அவர்களே நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள்.

வடக்கின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. தற்போது, பல அமைச்சர்கள் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர். இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து 3 மாத காலத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் முன்னேற்றத்தை பார்ப்பதற்காக நாம் 3 மாதத்தில் மீண்டும் இங்கு வருவோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில், கடன் சுமைகளில் உள்ள பெண்களுக்கான காசோலைகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கணனிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றன.

யாழ்.நகரிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராஜா

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை