DIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

Rizwan Segu Mohideen
DIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு-Nalaka De Silva Re Remanded Till Jan 30

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (21) கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவருக்கு எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் உடல்நலம் தொடர்பில் சிறைச்சாலை வைத்தியசாலை, நீதிமன்றம் சமர்ப்பித்த அறிக்கையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அவரது பிசியோதெரபி சிகிச்சை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர்களிடம் அனுப்பி வைக்குமாறு பதில் நீதவான் இதன்போது உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்க்கது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் நாம் நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (CID) பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க கடந்த அமர்வில் (16) நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள், இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவரை சந்தித்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அமைவாக இவ்விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 01/21/2019 - 13:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை