ஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் எதிரணிக்கு பந்துவீச்சில் சவால் கொடுக்க தவறிய இலங்கை அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஹோபார்டில் நேற்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அணி 5 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக அங்கு சென்றிருக்கும் இலங்கை அணியே இந்த பயிற்சி போட்டியில் ஆடி வருகிறது.

பயிற்சிப் போட்டி என்பதால் 16 வீரர்கள் சேர்க்கப்பட முடியும் என்பதோடு இவர்களில் 11 வீரர்களுக்கு துடுப்பெடுத்தாடவும் களத்தடுப்பில் ஈடுபடவும் முடியும்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலியே கிரிக்கெட் சபை அணியின் முதல் 5 விக்கெட்டுகளையும் 98 ஓட்டங்களுக்கு வீழ்த்துவதற்கு இலங்கை அணியால் முடிந்தது. அணித்தலைவர் ஜோ பேர்ன்ஸ் உட்பட முதல் மூன்று விக்கெட்டுகளும் 25 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 6 அவது விக்கெட்டுக்கு இணைந்த கர்டிஸ் பீட்டர்ஸன் மற்றும் ஜேக் டோரன் 218 ஓட்டங்களை பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இதன்போது பீட்டர்ஸன் ஆட்டமிழக்காது 157 ஓட்டங்களையும் டோரன் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றனர்்.

இதன்போது இலங்கை அணி 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய நிலையில் துஷ்மன்த சமீர 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கசுன் ராஜித்த 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணியில் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன 26 ஓட்டங்களுடனும் லஹிரு திரிமான்ன 12 ஓட்டங்களுடனும் இன்று இரண்டாவது நாளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 24 ஆம் திகதி பிரிஸ்பானில் ஆரம்பமாகவுள்ளது.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை