ஹசீனா மீண்டும் அமோக வெற்றி: எதிர்க்கட்சிகள் முடிவை நிராகரிப்பு

பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி ஒன்றை பெற்றிருப்பதாக நாட்டின் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதன்மூலம் ஹசீனா பிரதமராக தொடர்ச்சியாக மூன்றாவது தவணைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வன்முறை கொண்ட இந்த தேர்தல் முடிவுகளை ஒரு மோசடி எனக் கூறி பிரதான எதிர்க்கட்சி கூட்டணி நிராகரித்துள்ளது.

முந்திய தேர்தல்களை விஞ்சி அவாமி லீக் கட்சி 300 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 288 இடங்களை வென்றுள்ளது. வெறுமனே ஏழு இடங்களை மாத்திரமே எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

வாக்கெடுப்பை கேலிக்கூத்து என்று கண்டித்திருக்கும் எதிர்க்கட்சி, மறு தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

350 ஆசனங்கள் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதோடு ஒட்டுமொத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் அது ஒதுக்கப்படுகிறது.

“இந்த அபாயகரமான முடிவை உடன் இரத்துச் செய்யும்படி தேர்தல் ஆணையத்தை நாம் வலியுறுத்துகிறோம்” என்று எதிர்க்கட்சி தலைவர் கமால் ஹொஸைன் குறிப்பிட்டுள்ளார். “மத்தியஸ்த அரசு ஒன்றின் கீழ் முடியுமான விரைவில் புதிய தேர்தல் ஒன்றை நடத்த நாம் வலியுறுத்துகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மோசடி பற்றிய குற்றச்சாட்டுகள் நாடெங்கும் இருந்து கிடைத்ததாக குறிப்பிட்டிருக்கும் தேர்தல் ஆணையம் அது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடையே தேர்தலை ஒட்டி ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் 2009 தொடக்கம் ஆட்சியில் உள்ள ஷெய்க் ஹசீனாவின் அவாமி லீக், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குப் பதிவுகளை செய்ததாக முன்னணி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

போட்டியிடப்பட்ட 300 ஆசனங்களில் 221 இடங்களில் முறையற்ற நிலை இருந்ததாக பங்களாதேஷ் தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சித்தகோன் நகரில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் இருந்து வாக்கு பதிவு ஆரம்பிக்கும் முன்னர் நிரப்பப்பட்பட்ட வாக்குப் பெட்டிகளை கண்டதாக அங்குள்ள பி.பி.சி. செய்தியாளர் ஒருவர் விபரித்திருந்தார்.

அதேபோன்று நாடெங்கும் பல வாக்குச் சாவடிகளிலும் ஆளும் கட்சியின் வாக்குப் பதிவு முகவர்கள் மாத்திரமே இருந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

“இங்கே தேர்தல் நம்பகத் தன்மை குறித்த கவலையை ஏற்படுத்தி இருப்பதோடு, வாக்காளர் மீது அச்சுறுத்தல், எதிர்க்கட்சி வாக்குப்பதிவு முகவர்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பல வேட்பாளர்களும் மறு தேர்தலுக்காக அழைப்பு விடுத்திருப்பது ஆகிய மோசமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன” என்று மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு அஞ்சி, எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த குறைந்தது 47 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்கட்சிகள் இந்தத் தேர்தல் நியாயமற்றது என்று எச்சரித்திருந்தபோதும், எதிர்க்கட்சி தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசிய பிரதமர் ஹசீனா, “எதிர்க்கட்சியினர் ஒருபுறம் எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். மறுபுறம் எங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை தாக்குகின்றார்கள். இதுதான் இந்த நாட்டின் சோகம்” என்று தெரிவித்தார்.

16 கோடி மக்கள்தொகை கொண்ட பங்களாதேஷில் இஸ்லாமியவாதத் தீவிரவாதம், வறுமை, பருவநிலை மாற்றம், ஊழல் ஆகியன இந்தத் தேர்தலின் முக்கியப் பேசுபொருட்களாக இருந்தன. அதன் அண்டை நாடான மியன்மாரில் வன்முறைக்கு உள்ளான பல லட்சம் ரொஹிங்கிய இன முஸ்லிம்கள் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷ் சர்வதேசத் தலைப்புச் செய்திகளில் அண்மைய ஆண்டுகளில் இடம் பிடித்தது.

2014இல் நடந்த தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி புறக்கணித்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து முக்கியக் கட்சிகளும் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமைந்தது.

ஷெய்க் ஹசீனாவின் நீண்ட கால போட்டியாளராக உள்ள காலிதா சியா ஊழல் குற்றச்சாட்டில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவர் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டது. எனினும் இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சியா இல்லாத நிலையில் ஹசீனாவுக்கு நெருக்கமான இருந்தவரும் அவரது அரசின் அமைச்சராக இருந்தவருமான கமால் ஹொஸைன் பிரதான எதிர்க்கட்சிக்கு தலைமை வகித்தார்.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை