சொகுசு ரயிலின் முதல்பயணம் நேற்று ஆரம்பம்

"போதையிலிருந்து விடுதலையான நாடு"

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும் “போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு” எனப் பெயர்சூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயிலின் முதலாவது பயணத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) காலை நடைபெற்றது.

இப்பயணத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மருதானை வரை புகையிரதத்தில் பயணித்தார்.  

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் தோன்றிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் சமீப காலங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய  நேற்று முதல் ஆரம்பமாகிய அறநெறிப் பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு வாரத்துடன் இணைந்ததாக இந்த ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய ரயிலை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்த ஜனாதிபதி, போதைப்பொருளால் ஏற்படும் தீய பின்விளைவுகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.   இதில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி: போதைப்பொருள் தடுப்புக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வேலைத் திட்டங்கள் இந்த ஆண்டு முதல் புதிய தோற்றத்துடன் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டுவரும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கல் அவசியம் என்றார். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முகமாக பயணத்தை ஆரம்பித்த இந்த புகையிரதத்திற்கு “போதையிலிருந்து விடுதலையான நாடு” என்ற பெயர் சூட்டிய நிகழ்வை உறுதிப்படுத்தும் முகமாக ஜனாதிபதியால் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.  

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த ரயில் இரண்டு எஞ்சின்கள், குளிரூட்டப்பட்ட இரண்டு பெட்டிகள், 2ஆம் வகுப்பை கொண்ட இரண்டு பெட்டிகள் மற்றும் 3ஆம் வகுப்பை கொண்ட ஏழு பெட்டிகளை கொண்டுள்ளது.  

இந் நிகழ்வுடன் இணைந்ததாக அறநெறிப் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தெளிவூட்டும் விசேட நிகழ்வொன்று குருநாகலை ரயில் நிலையத்திலும் நேற்று நடைபெற்றது.   இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர். சமந்த கிதலவஆரச்சி ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tue, 01/29/2019 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை